அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 25ம் ஆண்டு நினைவு தினம்.
மன்னார் மறைமாவட்டம் வங்காலை புனித அன்னம்மாள் பங்கில் பணியாற்றும் வேளையில் இராணுவத்தால் 1985ம் ஆண்டு தை மாதம் 06ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 25ம் ஆண்டு நினைவு தினம் நேற்று (2010.01.06) வங்காலையில் நினைவு கூரப்பட்டது. இன்று காலை மன்னார் ஆயர் பேரருட்திரு இரா.யோசேப்பு ஆண்டகை அவர்களினால் நினைவுத் திருப்பலி வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியின் முடிவில் பங்குத் தந்தை அருட்பணி சூ.அ.கி.nஐயபாலன் குரூஸ் அடிகளாரின் தலைமையில் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் நினைவுச் சிலைக்கு முன்பாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அன்னாரின் பணிவாழ்வு , அர்ப்பணம் , ஏழைகள் மீது அவர் காட்டிய கரிசனை, நீதியின் மேல் அவர் கொண்டிருந்த தணியாத தாகம் பற்றி பலரும் எடுத்துரைத்தனர். இந் நிகழ்வின்போது நினைவுச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் கனடாவில் வசிக்கும் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் தாயாரும் , சகோதரரும் ,சகோதரியும் கலந்து கொண்டனர். அத்தோடு மன்னார், யாழ்ப்பாணம் ,கொழும்பு ஆகிய மறைமாவட்டங்களிலிருந்து பல குருக்களும் , துறவிகளும் கலந்து கொண்டனர். |